கண்ணாடிப் போத்தல்களுக்குள் நிரப்பப்பட்டிருக்கும் காதல்

[இப்பதிவு லகுடபாண்டியனை பிரிந்து சென்ற பெருங்காதலிக்குச் சமர்ப்பணம்]

துருக்கி கடற்கரையில்
மது அருந்திக் கொண்டிருந்த பொழுது
உன் பிரிவின் முதல் நினைவு வந்தது
மதுவின் கடைசி துளியில்
அது பல சொற்களாக
அழுகையாக
கசப்பாக உருப்பெற்றது
அதை முழுவதுமாக
காகிதங்களில் நிரப்பி வைத்தேன்
என்னால் வேறு எப்படியுமாக

உன்னை வைத்துக்கொள்ள முடியாது
காலி மது பாட்டிலில் காகிதங்களை அடைத்து
உன்னிடம் சேர்க்கச் சொல்லி
கடலில் அனுப்பி வைக்கிறேன்
பல வருடங்கள் தாண்டி
பல யுகங்கள் தாண்டி
எப்பொழுது வேண்டுமானாலும் உன்னிடம் வந்து சேரும்
அப்படி பல யுகங்களுக்கு முன்
நீ அனுப்பிய கடிதங்கள் கொண்டே
உன்னை இப்பொழுது நேசிக்கிறேன்
நீ என் காதலி
நீ என் பிசாசு
நீ என் முடிவிலி
நீ என் பிரபஞ்சம்
நீ – முன்னொரு ஜென்மத்தில் நான்
நான் – முன்னொரு ஜென்மத்தில் நீ
யுகம் யுகமாக காதலித்துக் கொண்டிருக்கிறோம்
யுகம் யுகமாக வெறுத்துக் கொண்டிருக்கிறோம்

img_0125

***

செல்பேசியில்
அழைப்பை ஏற்கும்
ஒரு இன்ச் இடைவெளி தான்
உன்னை என்னிடம் இருந்து
கடல் தூரம் பிரித்திருக்கிறது
என்னிடம் பேசிவிடு
எல்லாம் சரியாகிவிடும்

***

நெடுந்தொலைவு செல்லும் ஒரு படகில்
மிதந்து கொண்டிருந்தேன்
எனக்கான காதல் அனைத்தையும்
மது போத்தல்களுக்குள் நிரப்பி வைத்திருந்தாள்
கடும் தனிமையில்
ஒவ்வொரு மிடறாக குடித்தேன்
மேல் எழ நினைக்கும் நினைவுகளை
மது கொண்டு மேலும் இறுக்கமாக
அணைத்துக் கொண்டேன்
தனிமையில் கிடந்தது அழுது கொண்டிருந்த
நினைவுகளும் என்னை முத்தமிட்டது
அதனிடம் உரையாடத் துவங்கினேன்
என் கலைந்த கனவுகளைப் பற்றியே பேசியது
பெரும் கசப்பாக இருந்தது
மேலும் மது
இப்பொழுது ஒவ்வொரு போத்தல்களாக இறங்கியது
அழுகையைத் தவிர வேறு எப்படியுமாக
அதனிடம் என்னால் உரையாட முடியவில்லை
கட்டித் தழுவிக்கொண்டு
அவள் நிறைந்திருக்கும்
அழகான தருணங்களை பரிசளித்தது
வாங்கிப் பார்த்து
படகு மிதக்கும் சில்லிட்ட நீரில் கரைத்துவிட்டேன்
ஒன்றோடு ஒன்று பின்னிப் பெருகத் துவங்கியது
அத்தனை நீர்த் துளிகளும்
அவளாக நிறைந்துகொண்டன
கரைகளே இல்லாத முடிவற்ற போத்தலுக்குள்
மிதந்துகொண்டிருந்தது படகு.

***

// கீழ் வரும் கடிதம் லகுட பாண்டியன் பெருங்காதலிக்கு எழுதிய கடிதம். லகுடபாண்டியனின் டைரிக் குறிப்புகளில் இருந்து அப்படியே தருகிறேன். அதில் வரும் வார்த்தைகள் அனைத்தும் அவனுடையதே. //

அன்புள்ள பெருங்காதலிக்கு,

எப்படி இருக்கிறாய் கண்மணி. உன் நினைவுகள் அரற்றும் இரவின் விளிம்பில் அமர்ந்து இக்கடிதத்தை எழுதிக் கொண்டிருக்கிறேன். இது மாதிரியான சமயங்களில் நீ தந்த முதல் முத்தத்தை நினைத்துக்கொள்வேன். உன் கன்னங்கள் மீது பட்டுத் திரும்பும் என் மூச்சுக் காற்றின் கதகதப்பை நினைத்துக்கொள்வேன். உன் மடிமீது என்னை கிடத்திய தருணங்களை நினைத்துக்கொள்வேன். உன்னைக் காண வரும் பயணங்களை நினைத்துக்கொள்வேன். இப்படி நீ எதுவும் நினைப்பது உண்டா? எதுவாகவாவது உன் நினைவில் எஞ்சி இருக்கவே விரும்புகிறேன். உன் மீது எனக்கு எந்தக் கோபமும் இல்லை, ஒரே இரவில் என்னை பிரிந்து சென்றதைத் தவிர. எப்படியாவது வந்து விடுவாய் என நினைத்துக் கொண்டிருந்தேன். உன் அளவுக்கு நிதர்சனத்தை உணர முடிவதில்லை. ஆறு ஆண்டுகளுக்கு முன் உன்னை சுற்றித் திரிந்த அந்தச் சிறுவனாக நினைத்துப் பார்கையில் சிரிப்பாக இருக்கிறது. உன் பிரிவின் துயரம் கொடுத்த மரணத்தின் மடியில் இருந்து தப்பித்து வந்திருக்கிறேன். எல்லாவற்றையும் கடந்து செல்ல முயல்கிறேன். அந்த ஆறு ஆண்டுகளை மறந்துவிட துடிப்பதெல்லாம் முட்டாள்த்தனம். அந்த அழகான பொழுதுகளை நான் தினமும் தரிசிக்க விரும்புகிறேன். நேசிக்க விரும்புகிறேன். இத்தனை நாட்களாக நீ தந்த அன்பிற்கும், இரவுகளுக்கும், பரிசுகளுக்கும், கனவுகளுக்கும், காத்திருப்புகளுக்கும், கோபங்களுக்கும், சண்டைகளுக்கும், சண்டைக்கு பின் தரும் முத்தங்களுக்கும் நன்றி. உன் துகள் உன்றை உன் நினைவாக என்னிடமே வைத்திருக்கிறேன். அதை உன்னிடம் ஒப்படைப்பது எல்லாம் முடியாத காரியம். அர்த்தமற்றதும் கூட. உலகில் எல்லோரும் யாருடைய துகள்களையோ சுமந்து கொண்டே தான் வாழ்க்கை முழுவதும் திரிகிறார்கள். நானும் அப்படித் திரியவே விரும்புகிறேன். எங்கோ ஒரு நாள் நாம் சந்திக்க நேர்ந்தால் சிறு புன்னகையை மட்டும் கொடுத்து விட்டு போ.

என்றும் அன்புடன்

லகுட பாண்டியன்

(பின் குறிப்பு: மேலே உள்ள இரண்டு படங்களும் லகுடபாண்டியனும் பெருங்காதலியும் தீராத காதலில் திளைத்திருந்த பொழுதில் பகிர்ந்து கொண்டவை.)

Advertisements

2 thoughts on “கண்ணாடிப் போத்தல்களுக்குள் நிரப்பப்பட்டிருக்கும் காதல்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s