கோவா என்றொரு நகரம்

ஒவ்வொரு நண்பனிடமும் உனக்கான பாதை இருக்கும், ஒவ்வொரு பாதையிலும் உனக்கான நண்பன் இருப்பான். பயணித்துக் கொண்டே இரு

கோவா என்று முடிவாகிவிட்டது. எனக்கு சற்றும் நம்பிக்கையே இல்லை. இதற்குமுன் இப்படி பல முறை கோவாவிற்கான திட்டங்கள் செய்து, அது எல்லாமும் அப்படியே நவீன் வீட்டு வாசலிலே புதைக்கப்பட்டு இருக்கிறது. பெரும்பாலும் எங்கள் இப்படியான எல்லா திட்டங்களும் நவீன் வீட்டு வாசலில் நின்று வெட்டிக் கதைகள் பேசிக் கொண்டிருக்கும் பொழுது தான் ஆரம்பமாகும். அப்படியாக பல முறை கல்லூரி நாட்களில் கோவாவிற்கான திட்டங்கள் ஜரூராக நடைபெற்றது உண்டு. எல்லாம் திட்டங்களாகவே கிடக்கும். இப்பொழுது அனைவரும் கல்லூரி முடித்து விட்டோம். விஷ்ணு – கப்பலில் வேலை. நவீன் – இன்ஃபோசிஸில் வேலை. திரு எம்.பி.ஏ படித்துக்கொண்டிருக்கிறான். நான் இதோ சென்னையில் செய்வதறியாது இருக்கிறேன். விஷ்ணு ஆறு மாத விடுமுறையில் வந்திருந்தான். கடல் தொடர்பான பணிகளில் இது ஒரு சௌகரியம். ஒரு சேர மாதக் கணக்கில் விடுப்பு கிடைக்கும். அவன் தான் கோவா செல்வதற்கான பேச்சை ஆரம்பித்து, அனைவரையும் சரி கட்டி, கிறிஸ்துமஸ் விடுமுறையை கணக்கு செய்து ஹோட்டலில் ரூம் புக் செய்து வைத்தான். டிசெம்பர் மாதம் 23 சென்னையில் இருந்து புறப்பட்டு கோவா செல்கிறோம். 24, 25, 26 கோவாவில் செலவழித்து விட்டு 27ஆம் தேதி மீண்டும் சென்னை. இது தான் திட்டம். டிசெம்பர் மாதம் தான் கிறிஸ்துமஸ், புத்தாண்டு, சன் பர்ன் நிகழ்ச்சி என கோவா முழுவதும் கொண்டாட்டங்களில் மூழ்கி இருக்கும். இது கோவாவிற்கான சீசன் டைம். டிசெம்பர் மாதம் செல்லலாம் என்பதையே நவம்பர் மாத இறுதியில் தான் முடிவு செய்திருந்தோம். சீசன் என்பதால் அனைத்து ஹோட்டல்களில் அறைகளும் முன்பதிவு செய்திருந்தன. இணையதளத்தில் எவ்வளவு முக்கிக் கொண்டு தேடினாலும் ஒரு அறை கூட இல்லை. அப்படியே ஏதோ ஒன்று இருந்தாலும் ஓர் இரவுக்கு முப்பது ஆயிரம். நாங்கள் தங்கப்போவது 3 இரவுகள். கணக்கு பார்த்தால் 90,000 ஆயிரம். தலை சுற்றலே வந்து விட்டது. ஓர் இரவுக்கு 3000 ஆயிரத்திற்கும் அறைகள் இருந்தன. இதில் பிரச்சனை என்னவென்றால் அவை எல்லாம் தெற்கு கோவாவில் அமைந்து இருந்தன. கோவா – வடக்கு கோவா, தெற்கு கோவா. வடக்கு தான் நாம் எல்லாரும் நினைத்துக் கொண்டிருக்கும் கொண்டாட்டத்தின் கோவா. இரவு முழுவதும் விழித்திருக்கும் கோவா. தெற்கு கோவா அப்படி அல்ல. கர்நாடகா, மகாராஷ்ட்ரியத்தின் நீட்சி. காடுகள், மேடுகள், முந்திரி தோட்டங்கள். தெற்கில் அறை எடுத்துக்கொண்டு வடக்கு கோவாவிற்கு போய்வருவது சிரமம். இணையத்தை நம்பி பிரயோஜனம் இல்லை. திருவின் நண்பர் வழியாக சர்வீஸ் அப்பார்ட்மென்ட் ஒன்றை முன்பதிவு செய்து விட்டோம். மூன்று இரவுகளுக்கு 21,000 ரூபாய். கலாங்குட்டில்  (Calangute) அமைந்திருந்தது அபார்ட்மென்ட். பேருந்திலோ, விமானத்தில் செல்வது எல்லாம் இருக்கும் சூழ்நிலையில் நடக்காத ஒன்று. ரயில் என்று யோசித்தால், வெய்ட்டிங் லிஸ்ட்டில் கூட இடம் இல்லை. கார் தான் சரி. விஷ்ணு வீட்டில் இப்பொழுது தான் புதிதாக கார் வாங்கி இருந்தார்கள். டீசல் கார். அவன் வீட்டில் ஒரு பிரச்சனையும் இல்லை. நவீன், விஷ்ணு, நான் – மூவரும் கார் ஓட்டத் தெரிந்தவர்கள். திரு, ஈஸ்வர் இருவருக்கும் ஓட்டத் தெரிந்திருந்தாலும், நெடுஞ்சாலைகளில் ஓட்டுவது அத்தனை பரிச்சியம் இல்லை. சொல்ல மறந்து விட்டேன். ஈஸ்வர் – நவீன் தம்பி. கல்லூரி முதலாம் ஆண்டு படிக்கிறான்.  நவீனை கோவா அழைத்துச் செல்ல வேண்டும் என்றால் ஈஸ்வரையும் உடன் அழைத்துச்செல்ல வேண்டும் என்பது விதி. சென்னையில் இருந்து பெங்களூரு, பெங்களூருவில் இருந்து தும்கூர், சித்திர துர்கா, தார்வாத் நெடுஞ்சாலை வழியாக கோவா. இது தான் திட்டமிட்டிருந்த மார்கம். இணையவேளியிலும் பெருபாலும் பயணிகள் பரிந்துரைத்ததும் இதுவே. நவீன் வீட்டில் 23 ஆம் தேதி எல்லாம் தயாராக இருந்தது. இரண்டு நாட்களுக்கு முன்பாகவே விஷ்ணு, திரு, ஈஸ்வர் மூவரும் மதுரையில் இருந்து காரிலே செங்கல்பட்டு வந்து காத்திருந்தார்கள். நான் மதியம் செங்கல்பட்டு சென்றுவிட்டேன். அன்றைய தினம் நவீனுக்கு அலுவலகம். வந்ததும் கிளம்ப வேண்டியது தான். சென்னை மழை வெள்ளத்தில் இன்ஃபோசிஸ் அலுவலகத்திற்குள் தண்ணீர் புகுந்துவிட்டது. இடுப்பு அளவிற்கான தண்ணீர் கிடந்ததால். இரண்டு நாட்களுக்கு அலுவலகம் விடுமுறை விட்டார்கள். அதை சரி செய்வதற்கு இராப் பகலாக வேலை வாங்கிக் கொண்டிருந்தார்கள். 24ஆம் தேதி விடுப்பு எடுப்பதாகத் தான் இருந்தது. கண்டிப்பாக இந்த நிலையில் விடுப்பு தர மாட்டார்கள் என வயிறு வலி வந்து விட்டது நவீனுக்கு. மாலை ஆறு மணி அளவில் கிளம்பினோம். பெங்களுரு வரை நவீனும், பெங்களூரில் இருந்து விஷ்ணுவும், தார்வாதில் இருந்து நானும் கார் ஓட்ட வேண்டும். 12 மணி நேரம் கணக்கு வைத்தால் காலை 12 மணிக்குள் சென்று விடலாம். பன்னிரண்டு மணிக்கு மேல் தான் அறையில் செக் இன் செய்ய முடியும்.WP_20151224_06_49_09_Pro

நெடுஞ்சாலைகளில் இரவு நேரப் பயணம் சற்று ஆபத்தானது தான். பாதிக்கும் மேற்ப்பட்ட லாரி டிரைவர்கள் அரைத்தூக்கத்தில் தான் வண்டியே ஓட்டிக்கொண்டிருப்பார்கள். சில நேரங்களில் அப்படியே தூக்கத்தில் லாரியை டிவைடரில் விட்டு மல்லாக்க படுக்கப்போட்டிருப்பார்கள். இல்லை என்றால்  இடது பக்கமாக சாலையோர குழிகளுக்குள் நெட்டு குத்தலாக நிறுத்தி இருப்பார்கள். இப்படியான காட்ச்சிகளை சென்னை – மதுரை நெடுஞ்சாலைகளில் பல முறை பார்த்திருக்கிறேன். படு பயங்கரமாக இருக்கும். இது எல்லாம் போதாது என்று சொல்லி வைத்தார் போல லாரிகள் எதற்குமே பின் பக்க விளக்குகள் எரியாது. அவ்வளவு பெரிய லாரியில் ஒரே ஒரு மங்கலான சிவப்பு பல்பை தொங்கவிட்டிருப்பார்கள். வெளிச்சம் பட்டால் மிளிரும் ஸ்டிக்கர் கூட இருக்காது. அத்தனை பெரிய நெடுஞ்சாலையில் நாம் சென்று கொண்டிருக்கும் வேகத்தில் ஹை பீம் அடித்தால், புகை மண்டிய கருப்பு உருவம் மெதுவாக தெரியும். அப்படியே தெரியும் பட்ச்சத்தில் அது நகர்ந்து கொண்டிருக்கிறதா? அல்லது நின்று கொண்டிருக்கிறதா என கணிக்க வேண்டும். பழக்கப்பட்ட ஓட்டுநர்கள் மட்டுமே அதை கணிக்க முடியும். கொஞ்சம் பிசங்கினாலும் நேராக கைலாயம் தான். மூவருக்கும் இரவுகளில் வாகனம் ஓட்டுவது பழக்கப்பட்டிருந்தாலும், இப்பொழுது செல்வது பழக்கப்படாத சாலை. இதில் மற்ற்றொரு பிரச்சனை, நாங்கள் எடுத்து சென்ற காரில் ஹை பீம், லோ பீம் இரண்டுமே மந்தமாக இருந்தது. இதை எல்லாம் மனதில் வைத்துக் கொண்டு சற்று மிதமான வேகத்திலே வண்டியை நகர்த்திக் கொண்டிருந்தோம். செங்கல்பட்டி இருந்து சென்னை – பெங்களூரு நெடுஞ்சாலையை சிங்கப்பெருமாள் கோவிலில் இருந்து ஒரு குறுக்குச் சாலை வழியாக சென்றடைந்தோம். வேலூர் வரை பட மோசமான சாலை. ஒரே சீரான வேகத்தில் செல்வது கடினமாக இருந்தது. அத்தனை குழிகள். சில இடங்களில் சாலை உடைந்து கிடந்தது. எல்லாம் வரலாறு காணாத பெரும் மழை செய்தது தான். இதற்கு நடுவில் சாலையில் மாடுகளை மேய விட்டிருக்கிறார்கள். காலையில் என்றாலும் கூட மாடுகள் கண்ணுக்குத் தெரியும். இரவு நேரத்தில் சுத்தம். கரும் இருட்டில் சாலைகளில் சௌகரியமாக உட்கார்ந்திருந்தன சில மாடுகள். டிவைடரில் வளர்ந்து கிடக்கும் புதர்களுக்குள் இருந்து ஓடி வந்தன சில மாடுகள். அப்படி சாலைக்குள் ஓடி வந்த மாட்டின் மண்டை காரில் மோதி பிளந்து இருக்கும், சில வினாடிகளில் தப்பித்தது. வேலூர் சுங்கச் சாவடி தொடும் வரை இதே நிலைமைதான். குழி, மாடு, பதற்றம். வேலூர் தாண்டியதும் தான் உயிரே வந்தது. இரவு சாப்பாடு கிருஷ்ணகிரியை தாண்டியதும் மெக்டி(McD)யில் சாப்பிடலாம் எனச் சொல்லி இருந்தேன். பொதுவாக மெக்டியை  இரவு 11 மணியுடம் மூடிவிடுவார்கள். ஆனால் கிருஷ்ணகிரியில் இருந்து பெங்களூரு செல்லும் வழியில் உள்ள மெக்டி இருபத்தி நான்கு மணி நேரமும் திறந்து இருக்கும். ஆம்பூர் நெருங்கியதுமே பிரியாணி பற்றிய பேச்சு ஆரம்பமானது. நவீன் ஆம்பூரிலே இரவு உணவை முடித்துவிடலாம் என்று சொல்லிவிட்டான். அலுவலகத்தில் இருந்து வந்ததும் கிளம்பிவிட்டதால் பசி துவங்கி இருக்கும். தெரிந்த நண்பர்களிடம் விசாரித்ததில் ஸ்டார் பிரியாணிக் கடை நன்றாக இருக்கும் என்றார்கள். நல்ல வேளையாக நெடுஞ்சாலையிலே ஸ்டார் பிரியாணிக் கடை ஒன்று இருந்தது. இரவு உணவு முடிந்தது. அங்கிருந்து நேராக பெங்களுரு தான். நடுவில் நிறுத்தமே இல்லை. பெங்களுருவை நெருங்கும் பொழுது 12 மணி. மூடிய கார் கண்ணாடியை எல்லாம் தாண்டி குளிர் ஊடுருவிக் கொண்டிருந்தது. பனி சாலையை மூடி மறைத்து தரை வரை அழுத்திக் கொண்டிருந்தது. இப்பொழுது விஷ்ணு முறை. நவீன் பின் இருக்கைக்கு வந்து தூங்க ஆரம்பித்து விட்டான். தும்கூர் செல்ல பெங்களுரு நகரத்திற்குள் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. எலெக்ட்ரானிக் சிட்டியில் இருந்து நைஸ் எக்ஸ்பிரஸ் ஹைவே (nice express highway) பிடித்தால் தும்கூரை எளிதாக அடைந்துவிடலாம். நகரத்திற்குள் சென்று, நேர விரையத்தை தடுக்கவே இந்த ஹைவே அமைக்கப்பட்டிருந்தது. நெடுஞ்சாலை என்றால் நம்ம ஊர் நெடுஞ்சாலை போல் எல்லாம் கிடையாது. சாலையில் ஒரு பிசகு கூட இல்லை. அங்கே குறைந்த பட்ச வேகமே 120 தான். இந்தச் சாலை மைசூர், தும்கூர் என பல இடங்களை இணைக்கிறது. இதற்கான சுங்கக் கட்டணம் 155 ரூ. கோவா வரை இது தான் அதிகமான சுங்கக் கட்டணம். 20 – 30 கி.மீ நைஸ் ஹைவேயில் பயணம். ஒரு முறை கூட வேகத்தை குறைத்த மாதிரியே தெரியவில்லை. தும்கூரிலும் குளிர் இருந்தது. பனி சாலைகளை மூடிக் கிடந்தன. எனக்கு கண்கள் எல்லாம் எரிச்சலுடன் குளிர்ந்தது. கீழ் இமை மேல் இமையை இழுத்து தன்னுள் இணைத்துக் கொண்டிருந்தது. சாலைகள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து கடல் அலையாகவும், மணல் மேடுகலாகவும் தெரிந்தது. சாந்தமான கடல், ஆக்ரோஷமான கடல், நீரற்ற கடல், மணலாலான கடல், ஒளி நிரம்பிய கடல் என எண்ணற்ற கடல்கள். தனியாக நான் மட்டும் மூழ்கிக் கொண்டிருந்தேன். முச்சுத் திணறலே இல்லை. எல்லாவற்றையும் மறந்து உறங்கிப் போயிருந்தேன். காலை கண் விழிக்கும் பொழுது தார்வாத் செல்லும் நெடுஞ்சாலையில் உள்ள பல்க்கில் டீசல் நிரப்பிக் கொண்டிருந்தார்கள். சூரியன் இன்னும் முழுமையாக கண்ணில் படவில்லை. இரவு முழுவதும் வாகனம் ஓட்டியதில் விஷ்ணுவின் கண்கள் சிவந்து இருந்தது. நான் ஒட்டுவதாகச் சொன்னேன். நவீன் நானே கோவா வரை ஓட்டி விடுவதாகச் சொல்லி விட்டான். ஆக எனக்குச் சிரமம் இல்லை. வேடிக்கை பார்த்துக்கொண்டு வர வேண்டியது தான்.

தார்வாத் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தோம்.  இதற்கு மேல் யாருக்கும் உறுதியான வழி தெரியவில்லை. அதனால் கூகிள் மேப்ஸ் தான் வழி காண்பித்தது. அந்த நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரத்திற்கு மேல் பயணித்திருப்போம். நெடுஞ்சாலையில் இருந்து கீழ் இறங்கி இடது செல்லும் சாலைக்குச் செல்ல வேண்டும் என கூகிள் வழி சொன்னது. அது சாலை போல் எல்லாம் இல்லை. கிராமப்புற தெரு போல் இருந்தது. எல்லா சமையங்களிலும் கூகிளை நம்ப முடியாது. இறங்கி விசாரித்தோம். அதுதான் கோவா செல்வதற்கான வழியாம். இதில் பயணித்தால் நேராக கானாபூர் . கானாபூரில் இருந்து கோவா செல்லும் சாலையை அடையலாம் என்றார்கள். தமிழ்நாடு வண்டி எண் பார்த்துவிட்டு கொடுமையான தமிழில் பேசினார்கள். நாங்களும் பதிலுக்கு மிகவும்  கொடுமையான ஹிந்தியில் பேசினோம்.

IMG_6535

அந்தத் குறுகிய சாலை வழியாக செல்ல ஆரம்பித்த பொழுது காலை 6.30 மணி. சற்று தொலைவிலேயே சாலை சிறிது விரிவடைந்து இருந்தது. இரண்டு வாகனங்கள் செல்லலாம். இரண்டும் ஒன்றை ஒன்று கடக்கும் பொழுது மெதுவாகத் தான் செல்ல முடியும். இரு பக்ககங்களிலும் விவசாய நிலங்கள். விவசாயம் நடந்து கொண்டிருந்தது. அவ்வளவாக மக்கள் நடமாட்டம் இல்லை. காலை வேளை என்பதால் கூட இருக்கலாம். வயல் காடுகளுக்கு நடுவே பயணித்து கொண்டிருந்தோம்.

IMG_6550

சாலைகள் ஏற்றமும் இறக்கமுமாக செல்லத் துவங்கியது. வயல் வெளிகளில் சிறுமாற்றம் ஏற்பட்டிருந்தது. சில இடங்களில் contour ploughing செய்து இருந்தார்கள். மலைச் சரிவுகளில் விவசாயம் செய்பவர்கள் தான் இது மாதிரியான முறையை பின்பற்றுவார்கள். சரிந்து இருக்கும் நிலத்தில் படிக்கட்டுகள் போல அமைப்பார்கள். ஒவ்வொரு படியின் சம தளத்திலும் நடப்பு நடக்கும். மணல் சரிவையும், தண்ணீர் ஓட்டத்தையும் தடுப்பதற்காவே இந்த உத்தி. சிறிது தூரத்தில் அப்படியான நில அமைப்பும் மறைந்து, முழுவதுமாக மலைப்பாதையாக இருந்தது. மேற்கு தொடர்ச்சி மலையாக இருக்கலாம்.

IMG_6541

அதுவாகத் தான் இருக்கும். கோவாவிற்கு மலைகளில் பயணிக்க வேண்டும் என்பதே அப்பொழுது தான் தெரியும். எங்கள் யாருக்கும் மலைகளில் பயணித்த அனுபவம் கிடையாது. ஒவ்வொரு கொண்டை ஊசி வளைவுகளிலும் திகிலாக இருந்தது. சூரியன் முழுவதுமாக வெளியில் வந்திருந்தாலும், மலைகளுக்கே உண்டான குளிர் காற்று சாலையெங்கும் நிரம்பி இருந்தது. மலைகளை ரசித்துக் கொண்டிருந்ததில் காலை 10 மணியாகிவிட்டது. ஒரு உணவகத்தில் நிறுத்தினோம். இன்னும் கோவா எல்லைக்குள் சென்றிருக்கவில்லை. கர்நாடகா எல்லையில் இருந்தமையால் உணவகத்தில் சாம்பார் இனிப்பாக இருந்தது. எனக்கு அந்த சுவை பிடித்திருந்தது. திருவிற்கு சாப்பாடு சுத்தமாக இறங்கவில்லை. தோசையும் பூரியும் தேநீருமாக காலை உணவு முடிந்தது. மீண்டும் மலைகுகளுக்கு நடுவே பயணம்.

WP_20151224_08_32_00_Pro

தேவாலயங்களும், கோவா எஃப் சி பேனர்களும் கொஞ்சமாக தென்பட துவங்கி இருந்தது. கோவாவிற்குள் நுழைந்துவிட்டோம். இருபக்ககங்களிலும் குடியிருப்புகள் துவங்கி இருந்தது. கேரளாவில் இருப்பது போல. சாலைகள் என்னவோ மலைமேலேயே தான் சென்று கொண்டிருந்தது. பின்பு தான் தெரிந்தது கோவா முழுவதும் இப்படித் தான் என்று. கோவாவில் சமதளம் என்றால் அது கடல்கரைகள் மட்டுமே. மற்ற அனைத்தும் மலைகள் தான். இப்படி நாங்கள் எதிர்பார்க்கவில்லை. மீதமுள்ள நாட்கள் அனைத்திலும் இந்த குறுகிய சாலைகளில் பயணிக்க வேண்டும் என்ற எண்ணமே அச்சமூட்டுவதாக இருந்தது. முன்பதிவு செய்து இருந்த அறை கலாங்குட்டில் இருந்தது. கூகுளின் துணை கொண்டு கலாங்குட் வந்தடைய 12 மணியாகிவிட்டது. ஒரு வழியாக அறையை கண்டுபிடித்து செக் இன் செய்யும் பொழுது மணி 12.30. ஒரு படுக்கை அறை, ஹால், கிட்சன், கழிப்பறை. அறைகள் சுத்தமாக இருந்தன. அப்பார்ட்மென்டில் சிறிய நீச்சல்குளம் இருந்தது. களைப்பில் அனைவரும் சோர்ந்துபோயிருந்தோம். தூக்கம் தான் ஒரே தீர்வாக இருந்தது. ஒரு குட்டி தூக்கம் போட்டு விட்டு மதியம் 2.30 மணிக்கு கோவாவை சுற்றலாம் எனத் திட்டம். இப்பொழுது தூக்கம்.

பயணிப்போம்…

உரையாடலுக்கு – kumaar92@gmail.com

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s